#BREAKING : வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல்..!
வஃக்பு மசோதாவுக்கு நாடு முழுவதிலும் வலுத்து வரும் எதிர்ப்புகள் காரணமாக முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 1995-ல் திருத்தம் செய்யப்பட்ட வஃக்புகளின் சட்டம் தற்போது அமலில் உள்ளது. இதில் மேலும், 40 வகையான திருத்தங்கள் செய்து தயாராக உள்ள மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்திய ராணுவம் மற்றும் மத்திய ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவது நிலையில் அதிக நிலங்களை கொண்டவை முஸ்லிம்களின் வஃக்பு சொத்து. இதற்கு நாடு முழுவதிலும் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் அளவிலான 8.7 லட்சம் நிலங்கள் உள்ளன. இதனால், இன்று தாக்கலான சட்டதிருத்த மசோதா மீது முஸ்லிம்களின் கவனம் அதிகரிக்கத் துவங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மீது மத்திய அரசு அமலாக்க முயலும் திருத்தச் சட்டம் வஃக்புகளின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் இருக்கும் என்ற அச்சமும் முஸ்லிம்கள் இடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘கடந்த 2009 வரை வஃக்புகளிடம் வெறும் 3 லட்சம் நிலங்கள், 4 லட்சம் ஏக்கர் அளவில் இருந்தன. அடுத்த 13 வருடங்களில் இதன் எண்ணிக்கை 8,72,292 என சுமார் 8 லட்சம் ஏக்கர் என்ற அளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு 1995-ல் வஃக்புக்களுக்கு கிடைத்த கூடுதல் அதிகாரம் தான் காரணம் என தெரிந்துள்ளது.
இதை சரிசெய்யும் வகையில் இந்த புதிய சட்ட திருத்தம் அமைந்துள்ளது. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளுக்கு இதை புரியவைக்க அரசு முயலும். இது முடியாத நிலையில் அம்மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏனெனில், வஃக்பு திருத்தச் சட்டத்தை முஸ்லிம் தம் முன்பான பெரும் சவாலாகக் கருதத் தொடங்கிவிட்டதாக உளவுத் துறைகள் மூலம் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. 2019-ல் சிஏஏ சட்டத்துக்கானதை விட அதிக எதிர்ப்புகளை காட்ட முஸ்லிம்கள் தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது,’ என்று கூறினர்.
புதிய மசோதாவின் முக்கியத் திருத்தங்கள்: இந்த சட்ட திருத்தத்தில் வஃக்புகளின் சொத்துகள் அனைத்தும் இணையதளம் வழியாக பொதுமக்கள் அனைவரது கவனத்தில் பதிவு செய்யப்படுகிறது. தற்போது நாடு முழுவதிலும் 32 வஃக்பு வாரியங்கள் உள்ளன. இவற்றில் ஷியாவுக்களான வஃக்பு வாரியம், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அமைந்துள்ளது. இதற்கு ஷியா பிரிவினர் உபியில் அதிகம் இருப்பது காரணம். இதுபோல், போரா மற்றும் அகாகானி முஸ்லிம்களுக்காகவும் தனியாக ஒரு வஃக்பு வாரியம் அமைக்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்படுகிறது. தற்போது மத்திய அமைச்சர் தலைமையிலான வஃக்பு கவுன்சிலில் பெண் உறுப்பினர்களையும் நியமிக்க புதிய சட்டத்தில் கட்டாயமாகிறது.
சட்டதிருத்தத்தின் காரணம் என்ன? - நாட்டின் மூன்றாவது நிலையில் அதிக சொத்துக்கள் கொண்ட வஃக்புகளால், ஏழை முஸ்லிம்களுக்கு பலன் கிடைப்பதில்லை எனக் கருதப்படுகிறது. இதன் பெரும்பாலான சொத்துக்கள் முஸ்லிம்களில், பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களால் அனுபவிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் உள்ளன.மேலும் இப்புகார்களில் இந்த இரண்டு தரப்பினரால் பல வஃக்புகளின் நிர்வாகங்களில் சட்டவிரோதமான தலையீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வஃக்புகள் 11 மாதங்கள் முதல் அதிகபட்சம் 30 வருடங்கள் வரை வாடகைக்கு விடப்படுகிறது.
இந்த விவகாரத்திலும் பல சட்ட மீறல்கள் நடைப்பதாகவும் புகார்கள் உள்ளன. இதுபோல், வாடகைக்கு விடப்படும் நிலங்களில் சட்டவிரோதமாக பல கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் கட்டிட வரைபடங்கள் சம்மந்தப்பட்ட அரசு நிர்வாக அலுவலகங்களில் முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. இவை, வஃக்புக்கு சொந்தமானவை என்பதால் இவற்றின் மீது அரசு நிர்வாக அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பது சிக்கலாக உள்ளது. இதேபோல், வஃக்புகளுக்கு தேர்தல் முறையில் முத்தவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்த்தப்டுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் வெறும் மூன்று வருடங்களுக்கு என்றிருந்தாலும் அவர்கள் தம் செல்வாக்கை பயன்படுத்தி பதவி நீட்டிப்பை பெறுவதாகவும் புகார்கள் உள்ளன.
இதன் பிறகும் அவர்கள் வஃக்பு சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நீதிமன்றங்களின் வழக்கு தொடுத்து தேர்தலுக்கு தடை பெறுவதும் வழக்கமாக உள்ளது. இந்த தடைகளால் முத்தவல்லி உள்ளிட்ட வஃக்புகளின் ஜமாத்துகள் பல ஆண்டுகள் தம் பதவிகளில் அமர்ந்துகொள்வதும் உள்ளது. இந்தவகை தவறான முத்தவல்லிகளாலும் குறிப்பிட்ட வஃக்புகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுவதையும் மத்திய அரசின் புதிய மசோதா முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, இவற்றை மக்களவையில் எடுத்துரைத்து அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற மத்திய அரசு முயல்வதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது ஒன்றிய அரசு...இச்சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது