#BREAKING : பிரபல தமிழ் சினிமா இயக்குனர் ‘பசி’ துரை காலமானார்..!
தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் கலைமாமணி துரை, உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘பசி’ திரைப்படத்திற்கு 1979 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
இவர் பெண்களை மையப்படுத்தி அவளும் பெண்தானே, பசி போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் 2 முறை தேசிய விருதுகளை பெற்றவர். அத்துடன் 2011ல் 58வது தேசிய திரைப்பட விருதுகளில் நடுவர் உறுப்பினராக பணியாற்றியவர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர்.
இந்த பசி என்ற பட்டம் இவருக்கு இவர் இயக்கிய ‘பசி’ என்ற படத்தால் வந்தது. அதனால் மட்டுமல்ல வித்தியாசமான திரைப்படங்களை தொடர்ந்து தந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற இவரது ஆக்கப்பசியும் ஒரு காரணம். முக்கியமாக இவரது படங்கள் எல்லாமே வியாபார ரீதியில் வெற்றி கண்டவை.இவருடைய இயற்பெயர் செல்லதுரை.