#BREAKING : இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு..!

உலக அளவில் அதிக விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை இரு சக்கர வாகன விபத்துகளால் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாகும்.
தற்போது, வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணிவது போக்குவரத்து விதிகளின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, மத்திய அரசு மேற்கண்ட புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை.
ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென பிரேக் பிடிக்கும் போது சக்கரங்கள் லாக் ஆவது தவிர்க்கப்படும். இதனால் விபத்துகள் குறையும் என்பதால், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நடவடிக்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, 125 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களில் மட்டுமே ஏபிஎஸ் வசதி கட்டாயமாக உள்ளது. இதேபோல், தற்போது இரு சக்கர வாகனம் வாங்கும்போது ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், வரும் ஜனவரி 2026 முதல், இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன.