#BREAKING : தவெக கொடிக்கு தடையில்லை... விஜய்யை குஷியாக்கிய உயர்நீதிமன்றம்!
தவெகவின் பிரம்மாண்ட மாநாடு மதுரையில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் தவெக தொண்டர்கள் குஷியாகியுள்ளனர்.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அறக்கட்டளை தமிழக அரசின் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கென சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்கள் கொண்ட கொடி உருவாக்கப்பட்டு, கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த கொடிக்கு வர்த்தக முத்திரைக்கான பதிவு சான்றிதழ்களையும் பெற்றதாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த சபையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்கள் கொண்ட கொடியை தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வர்த்தக முத்திரைக்கான பதிவு சான்றிதழ்கள் பெற்றுள்ளதால், நாங்கள் மட்டுமே அந்த கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது. ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்த கட்சியின் கொடி அதே நிறத்தால் உள்ளது.
ஆகையால், தவெக கட்சி கொடியில் உள்ள வண்ணங்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிடக் வேண்டும். மேலும், எங்களது கொடியை தவறாக பயன்படுத்தியதற்காக ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் மற்றும் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடியை தான் தவெக பயன்படுத்தியுள்ளது என்று கூறி விட முடியாது. இரு கொடிகளையும் பயன்படுத்தினால் தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது எனக்கூறி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
