#BREAKING : தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம்..!
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் வி.திருவள்ளுவன் கடந்த 2021ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், இவர் வரும் டிச.,12ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார்.
இந்த நிலையில், துணைவேந்தர் திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற இவருக்கு, கவர்னர் மாளிகையில் இருந்து வந்த உத்தரவு குறித்த தகவலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். இவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
கற்பித்தல் சேவையில் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 5 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தேசிய கல்வி-ஆராய்ச்சி நிகழ்வுகளில் 4 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இயக்குனர், மொழியியல் துறை டீன் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராகவும், பதிவாளராகவும், சிண்டிகேட் உறுப்பினராகவும், புதுச்சேரி மொழியியல் - கலாசார மையத்தின் வழிகாட்டு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.