#BREAKING : ஈஷா யோகா விவகாரம் : தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியா் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் தனது 2 மகள்கள் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். அவர்களை ஆஜர்படுத்த வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் உத்தரவின்படி கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா தலைமையிலான குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்துக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். நேற்று 2வது நாளாக விசாரணை நடந்தது. அங்கு தங்கியிருப்பவர்கள் திருமணம் செய்யக்கூடாது, மொட்டை அடிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா?, சட்ட விதிமுறைக்கு மாறாக யோகா மையம் செயல்பட்டு வருகிறதா? என்ற விவரங்களையும் அவர்கள் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஈஷா யோகா மையம் தரப்பில் காவல்துறையினரின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.