#BREAKING : தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

தமிழகம் முழுதும் இன்று, 1,000 முதல்வர் மருந்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்,'' என, தி.மு.க., மருத்துவ அணி செயலர் எழிலன் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி
தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றில், 25 முதல், 50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும்.
கூட்டுறவு துறையும், தமிழக மருந்துகள் சேவைகள் கழகமும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. தமிழக அரசின் சார்பில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அம்மா மருந்தகங்களை மூடும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம் போன்றவற்றுடன் முதல்வர் மருந்தகம் என, ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.
அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. மக்களுக்கான திட்டங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம்; அதில் தவறில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டணமில்லா மருந்து விற்பனையை நிறுத்திவிட்டு, லாபம் சம்பாதிக்கும் நோக்கில் மத்திய அரசின் மருந்தகம் தொடங்கப்பட்டது. ஆனால், ஏழை மக்களுக்கு கட்டணமில்லா மருந்துகள் அரசு மருத்துவமனை மூலம் வழங்கிவிட்டு, நடுத்தர மக்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் முதல்வர் மருந்தகம் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது.
மத்தியில் மருந்து கொள்முதலுக்கு 14 நாட்களாகும். இங்கு 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படுகிறது. அங்கு வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முதல்வர் மருந்தகத்தில் அரசு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். எடுத்துக்காட்டாக நீரிழிவுக்கான (மெட்ஃபார்மின்) 30 மாத்திரை முதல்வரின் மருந்தகத்தில் ரூ.11-க்கும், மத்திய அரசு மருந்தகத்தில் ரூ.30-க்கும், தனியார் மருந்தகத்தில் ரூ.70-க்கும் விற்கப்படும். இவ்வாறு மத்திய அரசின் மருந்தகத்தை விட 20 சதவீதம் வரை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் விற்கப்படுகிறது. இங்கு 762 மருந்து வகைகள், அறுவை சிகிச்சைக்கான சில உபகரணங்கள், டாம்ப்கால் உள்ளிட்ட சித்த மருந்துகள் போன்றவை விற்கப்படும்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப்.24) தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், "கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள். குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கவும், சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி, தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.