#BREAKING: வெண்கலப் பதக்கத்துடன் ஓய்வு பெற்றார் ஸ்ரீஜேஷ்
இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் 'சீனியர்' ஸ்ரீஜேஷ் 38. கேரளாவின் கொச்சியை சேர்ந்தவர். துவக்கத்தில் வாலிபால், நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்தினார். பின் ஹாக்கி போட்டிக்கு மாறிய இவர், 2006 தெற்காசிய போட்டியில் அறிமுகம் ஆனார்.
கடந்த 2010ல் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். 2014, 2023ல் ஆசிய விளையாட்டில் தங்கம், 2018 சாம்பியன்ஸ் டிராபியில் தங்கம், 2018 ஆசியாட் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் இடம் பெற்றார்.
இந்திய ஹாக்கியின் 'தடுப்புச்சுவர்' என்றழைக்கப்படும் ஸ்ரீஜேஷ், ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா 41 ஆண்டுக்குப் பின் பதக்கம் (2021, டோக்கியோ, வெண்கலம்) வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம் பெற்ற இவர், இப்போட்டியுடன் தனது 18 ஆண்டு பயணத்தை முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக ஸ்ரீஜேஷ் தனது ஓய்வை அறிவித்தார். ஒலிம்பிக் தொடருடன் தான் ஹாக்கி விளையாட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இதை அடுத்து ஸ்ரீஜேஷ்-க்காக இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்ல வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், 2024 ஒலிம்பிக் தொடரில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறது. இந்த வெற்றியுடன் ஸ்ரீஜேஷ் இந்திய ஹாக்கி அணியில் இருந்து விடை பெற்றார்.