#BREAKING : 27-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து ஒன்பது மாதங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யதது. குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்றுக் கொண்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து வருகிறார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. எனவே புழல் சிறையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மாா்ச் 21 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் 27-ஆவது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார் செந்தில் பாலாஜி. விரைவில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று முறையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 முறையும், உச்ச நீதிமன்றத்தில் 1 முறையும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த முறை செந்தில் பாலாஜியின் கொங்கு மண்டலத்தில் திமுக அதிகம் தொகுதிகளில் களம் இறங்குகிறது. எனவே தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால், தங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என திமுக நம்புகிறது. இந்த சூழலில் அவரின் நீதிமன்ற காவல் 27வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.