#BIG NEWS: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம்... ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை..!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு இதுவரை 13 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து கானொலி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 11 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்கச் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராகச் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும்.. அவரை பதவிநீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற சென்னை ஐகோர்ட், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்குகளை முடித்துவைத்தது.இதற்கிடையே சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அமர்வு இன்று விசாரணை செய்தது.
இந்நிலையில், ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை; இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நடவடிக்கை சரியானது எனவும் தெரிவித்துள்ளது.