#BREAKING : சீமான் வீட்டு காவலாளி கைது!

நடிகை விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன், கற்பழிப்பு, கருக்கலைப்பு, மிரட்டல் போன்ற புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் கூறி 12 வார காலத்திற்குள் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று (27-02-25) ஆஜராகக் கோரி சீமானுக்கு வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சீமான், விசாரணைக்கு ஆஜராகாமல் அவரது வழக்கறிஞரான சங்கர், சீமான் காவல் நிலையத்தில் ஆஜராக நான்கு வார கால அவகாசம் கேட்டு கடிதம் ஒன்றை காவல்துறையிடம் அளித்தார். இதனால், மீண்டும் சீமானுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்த வளசரவாக்கம் காவல்துறையினர், சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு சென்றனர்.
காவல்துறையினர் அங்கு சென்றபோது, சீமான் வெளியூர் சென்றிருப்பதாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில், காவல்துறையினர் சீமான் வீட்டு வாசலில் சம்மனை ஒட்டினர்.
காவல்துறையினர் சம்மன் ஒட்டி ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் இருந்த காவலாளி ஒருவரும், அவருடன் மற்றொரு நபரும் இணைந்து அந்த சம்மனை கிழித்தனர்.
இந்நிலையில், சம்மனை கிழித்தவர்கள் குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக காவலாளி அமுல்ராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீட்டிற்குள் செல்லவிடாமல் அமுல்ராஜ் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.
காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கேட்டபோது தர மறுத்துள்ளார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் காவலாளி முன்னாள் ராணுவ வீரர் என்பதால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்குச் சீமான் மனைவி காவல் ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.