#BREAKING : துப்பு கொடுத்தால் 10 லட்சம் பரிசு..!
பெங்களூர் ஒயிட் பீல்டுயில் மிக பிரபலமான உணவமாக 'ராமேஸ்வரம் கபே' கடை உள்ளது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். குந்தலஹள்ளியில் உள்ள அந்த ஓட்டலில் சில தினங்களுக்கு முன் மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.அப்போது, மதியம் 1 மணியளவில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் என 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதனால் ஹோட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஹோட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சிதறின. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
பெங்களூர் நகரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறினார்.ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.மேலும் தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.