#BREAKING : நவ-30ல் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்...!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பருவ மழை தொடங்கிய நிலையில் விட்டு விட்டு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம், புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இதற்கும் ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட உள்ளது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக வலுப்பெறும் எனவும், அவ்வாறு உருவானால் அதற்கு 'ஃபெங்கல்' என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது.
மழை குறைந்ததால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 490 கி.மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்த நிலையில் தற்போது 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாகையில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
வரும் 30 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வங்கக் கடலில் வலுப்பெற்றாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு வரும்போது வலு இழந்து தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் எனத்தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 21 செ.மீ.க்கு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.