#BREAKING : பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கிய ராமதாஸ்... செல்லாது என அறிவித்த அன்புமணி..!

ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த பாமக பொதுக் குழுவில் இளைஞரணித் தலைவராக தனது பேரனை முகுந்தனை ராமதாஸ் அறிவிக்க, அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அடுத்த சில நாட்களில் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், நிறுவனர் என்கிற முறையில் தானே தலைவர் பதவியையும் எடுத்துக்கொள்வதாகவும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதனால் தந்தை - மகன் மோதல் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரித்துள்ளது என்றும் தானே தொடர்ந்து தலைவராக செயல்படுவேன் எனவும் அன்புமணி அறிவித்தார்.
அன்புமணி நீக்கத்திற்கு எதிராக பாமக முக்கிய நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாக குரல் கொடுக்கவில்லை. ஆனால், பாமக பொருளாளரான திலகபாமா, “பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. ஆனால் இந்த முடிவு தவறு” என்று பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திலகபாமாவை பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கடுமையாக சாடியுள்ளார்.
வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், “பாமக பொருளாளராக இருக்கும் திலகபாமா சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். திலகபாமா பாமகவுக்கு நேற்று வந்தவர். கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி போராட்டம், நிகழ்வுகளில் எதிலும் கலந்து கொள்ளாதவர். உடனிருந்தே கொள்ளும் நோய் திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக் குடியினம்” என்று விமர்சனம் செய்தார்.
ராமதாஸின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர் திலகபாமா என்ற வடிவேல் ராவணன், “உடனிருந்தே கொள்ளும் நோய் திலகபாமா. கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். ராமதாஸை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
அன்புமணி ராமதாஸ் மீது நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் வைத்த நிலையில், இன்று அன்புமணி தலைமையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.தைலாபுரத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டிய போது, அக்கூட்டத்தை பாமக மாவட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர். இந்த நிலையில், அன்புமணி தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
முதலில் ராமதாஸின் ஆதரவாளராக அறியப்பட்ட பாமக பொருளாளர் திலகபாமா, அன்புமணி கூட்டிய இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிலையில், பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பாமகவின் புதிய பொருளாளராக சையத் மன்சூர் உசேனை நியமித்து ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் பாமகவில் 25 மாவட்டச் செயலாளர்களை மாற்ற அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.தொடர்ந்து கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களை மாற்ற ராமதாஸ் கடிதம் தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்புமணி நடத்திய கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அன்புமணி அறிவித்துள்ளார்.
— Sun News (@sunnewstamil) May 30, 2025