#BREAKING : ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது..!
ராகுல் காந்தி தலைமையில், இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் இன்று புதுதில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய (ECI) தலைமையகத்திற்கு பேரணியாகச் செல்கின்றனர். இருப்பினும், டெல்லி காவல்துறை சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி எம்.பி.க்கள் பேரணியாகச் செல்வதைத் தடுத்துள்ளது. இந்த பேரணி இன்று காலை 11:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி தேர்தல் ஆணைய அலுவலகம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்லவிருந்தது.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, டில்லியில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதால், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் தடையை மீறி பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து நிர்வாச்சன் சதானில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியை தொடங்கினர். திமுக உள்பட சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆவேசமடைந்த பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பீஹார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்வதற்கு எதிராக கோஷங்களை எழுப்பனர். சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ், தடுப்புகளை எகிறி குதித்து சென்றார். தமிழக எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் தடுப்புகள் மீது ஏறி அமர்ந்து முழக்கமிட்டனர். இதனால் தலைநகர் டில்லியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்ற பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், அகிலேஷ் யாதவ், ஜோதிமணி எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், திருச்சி சிவா, உள்ளிட்ட எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் பேருந்தில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.