#BREAKING : புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கைது..!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியினர் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அருந்ததியினருக்கு வழங்கப்பட்ட 3% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
காவல்துறையும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நிலையில், அனுமதித்த நேரத்தில் போராட்டம் நடத்தவில்லை என்று கூறிய காவல்துறையினர், டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அவரது கட்சியினரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்த நிலையில், திடீரென டாக்டர் கிருஷ்ணசாமி சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"பேரணிக்கு அனுமதி வழங்கி விட்டு, ஆயிரக்கணக்கானோர் வந்த பிறகு அனுமதி மறுப்பது என்ன நியாயம்?" என்று கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.