#BREAKING: ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் ஜாமீன்..!
சுதந்திர போராட்ட வீரர் வீர சாவா்க்கர் உறவினர் சாத்யகி சாவர்க்கர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி லண்டனில் வீர சாவர்க்கருக்கு எதிராக அவதூறாக பேசியதாக சாத்யகி சாவர்க்கர் கூறியிருந்தார். ஒரு முறை வீர சாவர்க்கரும், அவரது நண்பர்களும் இஸ்லாமியர் ஒருவரை அடித்ததாகவும், அதற்காக வீர சாவர்க்கர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் புத்தகம் ஒன்றில் அவர் எழுதி இருந்ததாக ராகுல்காந்தி பேசியிருப்பதாக மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் வீர சாவர்க்கர் இதுபோல எந்த புத்தகத்திலும் எழுதவில்லை, ஆனால் வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருப்பதாகவும் மனுதாரர் கூறியிருந்தார்.
புனே நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சாத்யகி சாவர்க்கரின் புகாரில் உண்மை இருக்கிறது என ராகுல் காந்திக்கு எதிராக அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வீர சாவர்க்கர் பேரன் சாத்யகி சாவார்க்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராகுல் காந்தி இந்த வழக்கில் தொடர்ந்து 3 முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது பிடிவாரண்ட் ஆணை பிறப்பிக்க வேண்டும் என வாதிட நீதிமன்றம் பரபரப்பானது.
ஆனால் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் மிலிந்த் பவார், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் ராகுல் காந்தியால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என விளக்கம் தந்தார். இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்றைய தினம் விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் எனவும் புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு புணே சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி காணொளி மூலம் ஆஜரானார். அப்போது அவருக்கு ரூ.25,000 உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
ராகுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலிந்த் பவார், ராகுல் காந்தி ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது என்று கூறினார்.