#BREAKING : பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால் காலமானார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். டில்லியின் மோதிலால் நேரு தெருவில் உள்ள அரசு பங்களாவில், மன்மோகன் சிங் உடல் நேற்று வைக்கப்பட்டிருந்தது. பல தலைவர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அவருடைய உடல், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 8:00 மணிக்கு எடுத்து வரப்பட்டது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா உட்பட காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து, 9.30 மணிக்கு டில்லி சாலையில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவரது உடல் நிகாம்போத் காட் பகுதியில் உள்ள யமுனை நதிக்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.
மன்மோகன் சிங் உடலுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு,துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா, வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.