#BREAKING : பிரபல தமிழ் பட நடிகர் கைது..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். அதன்பின்னர் நாடு, கூகுள் குட்டப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர், தற்போது சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 4) அதிகாலை அவர் வீட்டின் முன்பு ஒருவர் காரை நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தர்ஷன் விசாரித்த போது, காரை நிறுத்திவிட்டு, எதிரே உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த கார் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்களை தாக்கியதாக இருதரப்பினரும் மாறி, மாறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் கூறுகையில், ”நான் வழக்கம்போல இன்று அதிகாலை 3 மணிக்கு ஜிம்முக்கு சென்றுவிட்டு, 4.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய வீட்டு வாசல் முன்பு ஒரு கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் யாருடைய கார் என்று விசாரித்தேன். அவர்கள் ’இல்லை’ என்று சொன்னதும், வீட்டுக்கும் போன் செய்து உறவினர்கள் யாரும் வந்திருக்கிறார்களா என்று கேட்டேன். அவர்களும் இல்லை என்றனர்.
இதனையடுத்து மேல் வீட்டில் இருந்த என்னுடைய தம்பியிடம், ’கார் ஒன்று வெளியே நிற்கிறது யார் என்று தெரியவில்லை, வா’ என்று சொன்னேன். அவர் வந்து பக்கத்தில் இருந்த டீக்கடையில் விசாரிக்கும் போது, அங்கிருந்த ஒரு குடும்பத்தினர், ’இது எங்களுடைய கார்’ என்று கூறினர்.
அப்போது அவர்களிடம், “ஏங்க நான் 20 நிமிடமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். ரோட்டில் அதிக நேரம் காரை நிறுத்த முடியாது. கொஞ்சம் காரை எடுங்கள்” என்று கூறிவிட்டு, எனது காரை எடுப்பதற்கு சென்றேன்.
அதற்குள் அவர்கள் என் தம்பியிடம், ’பிக் பாஸ் போனா அவன் என்ன பெரிய ஆளா ஏன் அவனால் கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ண முடியாதா?’ என்று கேட்டு, என் தம்பி மீது அவர்கள் குடித்து கொண்டிருந்த, சூடான டீயை முகத்திலேயே ஊற்றி விட்டார்கள். அதனை தடுக்க முயன்ற என் தம்பியை கீழே தள்ளிவிட்டு, அவன் நெஞ்சு மீது ஏறி உட்கார்ந்து தாக்கினர்.
அதனைத் தடுக்க சென்ற என்னையும் தாக்கிவிட்டு, ’நான் ஜட்ஜ் பையன் டா, உன்னால என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டு என் முகம், கைகளில் நகத்தால் கீறி தாக்க முயற்சித்தார்கள்.
தொடர்ந்து அவர்கள் மீது நாங்கள் புகார் அளித்த நிலையில், தற்போது அவர்களும் எங்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது, இங்கே சுமார் 50 பேர் இருந்தனர். அவர்களுக்கு தெரியும் யார் தவறு செய்தார்கள்.
போலீஸ் வந்து அவர்களை விசாரித்து விட்டு போன பிறகும் கூட எதிர் தரப்பினர் இங்கே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மூன்று மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டு நாங்கள் அடித்துவிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?” எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே செய்தியாளர்கள் முன் கண்கலங்கினார்.
இதற்கிடையே காரை தர்ஷன் வீட்டு முன்பு காரை நிறுத்தியவர் நீதிபதியின் மகன் ஆதிசூடி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் தர்ஷன் மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் தர்ஷன் தாக்கியதாக கூறி ஆதிசூடி மற்றும் அவரது தாயாரும் அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “பிக்பாஸ் பிரபலம் என்று தாயார் விசாரித்தபோது, அவரிடம் கடுமையாக தர்ஷன் பேசினார். தொடர்ந்து தர்ஷன் தரப்பினர் என் மனைவியை ஆபாசமாக பேசினர். இதுகுறித்து கேட்கச் சென்றபோது என்னையும் அவர்கள் தாக்கினர்” என்று தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷை காவலர்கள் சற்றுமுன் கைது செய்துள்ளனர். இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடைபெறுகிறது.