#BREAKING : பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..!

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர்.
இவர் நடித்த "மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை" போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவரை திரைத்துறையில் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். ஏனெனில் கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் கம்பெனியில் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணியாற்றிவந்த அவருக்கு உள்ளுக்குள் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
இயக்கும் ஆசை இருந்தாலும் அதற்கேற்ற பயிற்சி எடுக்க வேண்டுமென்பதற்காக சரவண சுப்பையா இயக்கத்தில் உருவான சிட்டிசன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். அதேபோல் பிரபல இயக்குநரான பவித்ரனிடமும் சுப்பிரமணி உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மேலும் தமிழ் திரைத்துறையில் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்த அவர்; ஒரு கதையையும் தயார் செய்து இயக்குவதற்கும் ரெடியானார்.
அந்தக் கதையை விஜயகாந்த், சத்யராஜ், விஜய் பெரும்பாலான கதாநாயகர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் நடிப்பதற்கு முன்வரவில்லை.அதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர்களிடமும் அந்தக் கதை சென்றது. இருப்பினும் அங்கிருந்தும் நடிக்க யாரும் தயாராகவில்லை. ஆனாலும் எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருந்த சுப்பிரமணிக்கு கடைசிவரை இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இயக்குநராக வெல்ல முடியவில்லை நடிகராக பெயர் எடுக்க வேண்டும் என்று மிக தீவிரமாக உழைத்த அவர் காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம்,வானம் கொட்டட்டும், ஹீரோ, அருவம், மகாமுனி, கூர்கா, இரும்பு திரை, ரஜினி முருகன், அழகர்சாமியின் குதிரை என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். தான் ஏற்ற ரோலை மிக சிறப்பாக செய்துகொண்டிருந்தார். அதிலும் பரியேறும் பெருமாள், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
நடிப்பில் கடைசியாக பரமன் திரைப்படம் வெளியானது. அதில் அவர்தான் லீட் ரோலை ஏற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் என்பது தெரியவந்திருக்கிறது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் நான்காம் கட்ட புற்றுநோயோடு கடுமையான நிதி நெருக்கடியுடன் போராடிவருகிறார்.அவருக்குப் பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் சமீபத்தில் கோரிக்கை வைத்தனர்.
நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சாந்துனு, சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், விஜய் முத்து, பூச்சி முருகன், சின்னத்திரை நடிகர் பாலா, இயக்குநர்கள் ஜவஹர் மித்ரன், வீர அன்பரசு மற்றும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், இன்னும் பலர் பணம் உதவி செய்தனர். இந்த நிலையில், நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சற்று முன் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.