#BREAKING :- அன்புமணியே தலைவராக தொடர்வார்: பாமக பொதுக்குழுவில் தீர்மானம்..!
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறும் என கட்சியின் நிறுவனர் -தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதற்கு போட்டியாகவே அன்புமணி, ஆகஸ்ட் 9-ந் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டார்.
அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ்- அன்புமணியிடம் தனியே விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராமதாஸும், நேரில் அன்புமணியும் ஆஜராகினர்.
இந்த விசாரணையின் முடிவில், அன்புமணி இன்று பொதுக்குழுவை நடத்த அனுமதித்தது உயர்நீதிமன்றம். அதே நேரத்தில் ராமதாஸ் தரப்பு, உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்து ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் அன்புமணி தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீது உள இடஒதுக்கீடு முதல் அன்புமணி தான் பாமக தலைவர் என்பது உள்பட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
'வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். குடிநீர், வீட்டு வரி, சொத்து வரி உயர்வுக்கு கண்டனம். அத்தியாவசிய பொருட்களின் விலை கண்மூடித்தனமான உயர்வுக்கு எதிர்ப்பு. உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை அன்புமணியே பாமக தலைவராக தொடர்வார்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.