#BREAKING : விக்கிரவாண்டி பாமக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி..!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுகிறார்.மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியும் ஓமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு லேசான நெஞ்சுவலி காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது