#BREAKING : பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், தமிழக அரசு சார்பில் 2.23 ஏக்கர் பரப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் மெரினா கடலில் அவருக்கு ரூ.81 கோடி செலவில், 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.
இந்த சூழலில் ” கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடற்கரையோரங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், அந்த வகையில், சென்னை மெரினா கடலில் பேனா வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பின் சின்னம் அமைப்பது கடலோர ஒழுமுறை மண்டல விதிகள் அனைத்தையும் மீறிய நடவடிக்கை ஆகும். அதேபோல் காலநிலை மாற்றத்தால் அதிக மழைபொழிவு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இவ்வாறான தேவையில்லாத, முக்கியத்துவமற்ற கட்டுமான திட்டங்களால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். எனவே பேனா அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தது. பொதுநலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.