#BREAKING : ஆபரேஷன் சிந்தூர் - கனிமொழி எம்.பி.யை சேர்த்து குழு அமைத்த மத்திய அரசு...!

‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், பாய்ஜெயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனா ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, JDU சஞ்சய் குமார் ஜா ஆகியோர் அடங்கிய 7 குழுக்கள் அமைப்பு.7 குழுக்களும் விரைவில் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.
பயங்கரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கையை உலக நாடுகளிடம் எடுத்துரைக்கும் வாய்ப்பாக இந்த தருணத்தை மத்திய அரசு கருதுகிறது. அந்த வகையில், ஏழு பேர் கொண்ட அனைத்து கட்சி குழு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் கட்சி பாகுபாடு இல்லாமல், நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலா ஓர் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
அந்த வகையில், சசிதரூர் (காங்கிரஸ்), ரவிசங்கர் பிரசாத் (பாஜக), சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதா தளம்), பைஜெயந்த் பாண்டா (பாஜக), கனிமொழி கருணாநிதி (திமுக) சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
இந்தக் குழுவினர் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க உள்ளனர். போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டும் என கூறப்படுகிறது.
அத்தகைய தயக்கத்தை போக்கும் வகையில், இந்த குழுவை அமைத்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. அரசியல் பாகுபாட்டைத் தாண்டி நாட்டின் ஒற்றுமையை இந்தக் குழு பறைசாற்றுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.