#BREAKING : புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்..!
இந்திரா சௌந்தர்ராஜனின் இயற்பெயர் சௌந்தர்ராஜன். 1958-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி -இந்திரா தம்பதியினருக்குப் பிறந்தார். நாற்பது ஆண்டுகாலமாக மதுரையில் வசிக்கிறார். சேலம் பாரதி வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் நெட்டூர் தொழிற்கல்வி கல்லூரியில் தொழிற்கல்வி பயின்றார். தொலைவழிக் கல்வியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றார்.
டி.வி.எஸ் நிறுவனத்தில் துணைப்பொறியாளராக பணியாற்றினார். பின்னர் தொலைக்காட்சியிலும் திரைப்படத்துறையிலும் பணியாற்றத் தொடங்கினார்..
ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த 'கோட்டைபுரத்து வீடு' என்ற தொடரின் மூலம் பொதுவாசகர்களைக் கவர்ந்த இவர் பின்னர் 'ஐந்து வழி மூன்று வாசல்', 'ரகசியமாய் ஒரு ரகசியம்' போன்ற தொடர்களை எழுதினார். அமானுஷ்யம், சித்தர்கள் பற்றிய குறிப்புகள், ஆன்மிக மர்மங்கள் போன்றவற்றை களமாகக்கொண்டு கதைகளை எழுதினார்.
விகடனில் 'ரகசியமாய் ஒரு ரகசியம்' என்ற தொடரை 'மர்மதேசம்' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதினார். பின்னர் அந்த வரிசையில் 'விடாது கருப்பு', 'ருத்ரவீணை', 'கிருஷ்ணதாசி', 'சிவமயம்', 'அதுமட்டும் ரகசியம்' போன்ற பல தொடர்கள் தொலைக்காட்சியில் வெளிவந்தன.
இந்திரா சௌந்தர்ராஜனின் முதல் திரைப்படம் 'சிருங்காரம்'. தேசிய விருது பெற்ற அப்படம் 70 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் பின்புலத்தில் வாழ்ந்த தேவதாசிகளைப்பற்றிய கதை. அதைத்தொடர்ந்து அனந்தபுரத்து வீடு மற்றும் இருட்டு போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன.
இந்நிலையில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) இன்று (நவ., 10) காலமானார். மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.
இந்திரா சௌந்தர ராஜன் மறைவுக்கு எழுத்தாளர்கள், அவருடைய வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.