#BREAKING : சென்னை உட்பட 14 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன்; பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். அண்ணா பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான். இவர்கள் மூவரும், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பான, 'ஹிஸ்ப் உத் தாஹரீர்' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, மூவரிடமும் தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த முகமது மவுரிஸ், 36; காதர் நவாஸ் ஷெரிப், 35, அகமது அலி உமரி, 46, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்துள்ளது. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக, இன்று(செப்.,24) தமிழகத்தில் சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆதாரங்களை திரட்டும் வகையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலங்களில் சோதனை நடத்தினர். அதிகாலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.