#BREAKING : நடிகர் மோகன்லால் ராஜினாமா..!
பாலியல் புகார் எதிரொலியாக நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் நடிகர் மோகன்லால்.பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் நடிகர் சாரதா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த குழுவினர் மலையாள திரையுலகில் பல்வேறு பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளான 51 பேரிடமும் விசாரணை நடத்தி, அங்கு நிலவும் பாலின பாகுபாடுகள், பாலியல் அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து விரிவாக அறிக்கையை தயார் செய்தது. 2019ஆம் ஆண்டில் இந்த குழு கேரள அரசிடம் சமர்பித்தது.இந்த ஹேமா கமிட்டி அறிக்கை சமர்பிக்கப்பட்டு சுமார் பல ஆண்டுகளாக அரசு தரப்பில் வெளியிடப்படாமல் இருந்தது. மேலும் ஹேமா கமிட்டி சமர்பித்த அறிக்கையை ஆய்வு செய்ய தனி குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்திருந்தது. இந்த நிலையில், திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கேரள அரசு கடந்த ஆக.19ஆம் தேதி வெளியிட்டது. இருப்பினும், இந்த அறிக்கையில் சர்ச்சையான பல பகுதிகள் நீக்கப்பட்டு 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
இந்த அறிக்கை வெளிவந்தது முதல் மலையாள திரையுலகில் பரபரப்பான சூழல் நிலவியது. மீண்டும் பல்வேறு நடிகைகள் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.
இதனால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் பதவியிலிருந்து அவர் விலகினார். முன்னதாக ‘அம்மா’ அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் அமைதி காப்பதாக புகார் எழுந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனது தலைவர் பொறுப்பை மோகன்லால் ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர்கள் சங்கத்தில் நிகழ்ந்த இந்த ‘கூண்டோடு’ ராஜினாமா முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.