#BREAKING : வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி..!
வங்கதேசத்தில் போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.
மேலும், பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இடைக்கால அரசை ராணுவம் அமைத்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குப் புறப்பட்டதாகவும் அந்நாட்டு நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி, தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், முன்னெச்சரிக்கையாக, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சி ஆதரவாளா்கள், போராட்டக்காரா்கள் மற்றும் காவல் துறையினா் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் காவல் துறையினா் உள்பட 98 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.