#BREAKING : மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அங்கன்வாடிக்குப் படிக்கச் சென்ற மூன்றரை வயது சிறுமியிடம் அத்துமீறிய 17 வயது சிறுவனைக் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
இந்தநிலையில், மயிலாடுதுறையில் இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் குறித்த ஒரு நாள் திறன்வளர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் மகாபாரதி, “சிறுமியின் குடும்பத்துக்கும் சிறுவனின் குடும்பத்துக்கும் முன்பகை இருந்துள்ளது. இதன் காரணமாக, அந்த சிறுமி சிறுவன் முகத்தில் காலையில் எச்சில் துப்பியுள்ளார். சிறுமி தவறாக நடந்துள்ளது. இதுதான், இந்த சம்பவத்துக்கு காரணம். இரண்டு பக்கமும் பார்க்க வேண்டியதுள்ளது” என்று பேசினார்.
ஆட்சியரின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,
“குழந்தைகளுக்கு எதிராக இப்படியான கருத்துகளைப் பேசும் நபர்கள் எப்படி தங்களைப் படித்தவர்கள் என்றும், மனிதர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். நாம் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதியை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.