#BREAKING : இர்பானை மன்னிக்க முடியாது - எச்சரித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்..!
இர்பான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," தொப்புள் கொடியை வெட்டிய இர்பானை மன்னிக்க முடியாது. தண்டிக்க வேண்டும். தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக எப்போதும் நினைக்காது. இர்பான் செய்தது மிகவும் தவறான செயல். அவர் மன்னிப்பு கேட்டாலும் அவரை விடமாட்டோம்" என கூறினார். இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.
பிரபல யூடியூபர் இர்பான், தனது யூடியூப் சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். அண்மையில் திருமணம் செய்து கொண்ட இர்பான், தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இர்பானின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.மருத்துவத்துறையும் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் வழங்கினார். இதனால், அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை கைவிட்டது.
இந்த நிலையில்தான், இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மனைவியின் பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று, தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அதை வீடியோவாக அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இர்பானின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
அந்த வீடியோவில், மனைவியுடன் இர்பான் பேசுவது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, அறுவை சிகிச்சைக்கு தயாராவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல, அறுவை சிகிச்சையின் போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் காட்சிகளும் இருந்தன. இர்பானின் இந்த செயல் மருத்துவ சட்டப்படி தவறு ஆகும்.
முறையான பயிற்சி எதுவும் இன்றி இர்பான் இத்தகைய செயலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் பலரும் கூறியிருந்தனர். இர்பான் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மருத்துவத்துறையின் கவனத்திற்கும் இர்பானின் செயல் சென்ற நிலையில், சோழிங்கநல்லூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவை இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தி கூறுகையில், மருத்துவமனை நிர்வாகத்திடமும், யூடியூபர் இர்பானிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவரது விளக்கம் சரியாக இல்லை என்றால் இர்பான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்" என்றார். இர்பானின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.