#BREAKING : கரிசல் குயில் கிருஷ்ணசாமி காலமானார்..!

தமிழகம் முழுவதும் உழைப்பாளி மக்களை ஈர்த்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி காலமானார்..
கிருஷ்ணசாமி, விருதுநகர் மாவட்டம் நரிக்குளம் எனும் சிற்றூரில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தபால் துறையில் பணியாற்றியபோது சங்க தொடர்புகளின் மூலம் தமுஎகச அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு 1980ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் கரிசல்குயில் இசைக்குழு உருவானதில் முக்கியப் பங்காற்றியவர். தனது இனிமையான குரல் வளத்தால் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் கரிசல்குயில் இசைக்குழுவை கொண்டு சென்றவர். வேண்டான்டா வெள்ளை மாத்திரை, கட்டபொம்மனும் சேரனும் சோழனும் முட்டி மோதுற ரோடு, கலெக்டர் வாராரு காரு ஏறி தாரு ரோட்டுல, எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே, இலைகள் அழுதுவிடும் பனி இரவு என கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடும் பாடல்கள் எளிய மக்களின் மனங்களைத் தொட்டன. தனது எளிய பாடல்கள் மூலம் உழைப்பாளி மக்களை தட்டியெழுப்பியவர். கலை இரவு மேடைகளில் விடிய விடிய அவரது கானங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது குரலின் வளமும், உணர்வும் எட்ட முடியாத உயரத்தை கொண்டது. மதுரையில் நடந்து முடிந்த 24வது அகில இந்திய மாநாட்டிலும் கரிசல் குயில் கிருஷ்ணசாமி இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக இருப்பவர்.
இந்நிலையில் இசை கலைஞர் கரிசல்கிருஷ்ணன் சாமி உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் வயது 60. சமூக கருத்துள்ள பல பாடல்களை பாடியதால் கரிசல் கிருஷ்ணசாமி என அழைக்கப்பட்டார். இவருடைய மறைவுக்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் மதுரை எம்.பி சு வெங்கடேசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்