#BREAKING : கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு!
தமிழில் இருந்து கன்னடம் உள்ளிட்ட மொழிகள் தோன்றியதாக கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவை அவமதித்தால் கமல்ஹாசனின் படங்களுக்கு தடை விதிக்கப்படும்" என்றும், "கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில கன்னட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.
இதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "நடிகர் கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியாது. கன்னடமொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கமலுக்கு தெரியவில்லை. வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், "கன்னடம் குறித்து பேசியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்; மன்னிப்பு கேட்கவில்லை என்றால் Thug Life படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்" என்று கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்வில் பேசிய கமலஹாசன், "அவர்கள் இந்த விஷயத்தில் குழப்பத்தில் உள்ளனர். நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. மொழி குறித்த வரலாறுகளை வரலாற்று அறிஞர்கள் எனக்கு கற்பித்துள்ளனர். மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் தான் ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர், தமிழர், கர்நாடகாவை சேர்ந்த அய்யங்கார் என பலர் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் நடந்தது இல்லை.
கர்நாடகாவில் பிறந்தது தமிழகத்தில் முதலமைச்சர் ஆகியவருக்கு ஒருமுறை பிரச்சினை என்று வந்தபோது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தததுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடகத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே தக் லைஃப் படத்தையும் மற்றும் கமல்ஹாசனையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மொழிகள் குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. அதற்கான கல்வியறிவு அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே இந்த விஷயம் குறித்த விவாதத்தை வரலாற்று அறிஞர்களிடம், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். நான் பேசியது சிவராஜ்குமார் மீதான அன்பில் வந்தவை. நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் இருந்தால் பார்த்தால் அவர்கள் சொல்வது அவர்களுக்கு சரியாக இருக்கும். அதுவே, தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரியாக இருக்கும். இதில் மூன்றாவது கோணம் உள்ளது. அது நான் சொன்னதுபோல் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை. அவர்கள் இந்த இரண்டுமே சரி என்பார்கள். ஆனால், கன்னடர்கள் நமது குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது வடக்கில் இருந்து வந்த மொழியை சேர்ந்தவர்களா எனபதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்வார்கள். இது பதில் இல்லை, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
"Love will Never Apologize" நான் சொன்னதை என் பக்கத்திலிருந்து பார்த்தால் சரியாக தெரியும். ; மொழிகள் குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை" என விளக்கமளித்துள்ளார்.