51வது தலைமை நீதிபதியாகச் சஞ்சீவ் கன்னா பதவியேற்றார் !
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று (நவ.,11) நீதிபதி சஞ்சீவ் கன்னா 51வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். அவருக்கு ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரது பதவிக்காலம் மே 13, 2025ம் ஆண்டுவரை நீடிக்கும்.
இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சஞ்சீவ் கன்னா 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் பிறந்தார். அவர் டில்லி பல்கலையில் சட்டம் பயின்றார்.
சஞ்சீவ் கன்னாவின் தந்தை டில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985ம் ஆண்டுவரை பதவி வகித்துள்ளார். அவரின் தாயார் சரோஜ் கன்னா டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
சஞ்சீவ் கன்னா 1983ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். அவர் தனது வழக்கறிஞர் வாழ்க்கையை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடங்கினார்.
2004ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார் சஞ்சீவ் கன்னா.
சஞ்சீவ் கன்னா 2005ம் ஆண்டு டில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார்.
ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.