#BREAKING : கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை..!
17 வயதான சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், கனடாவின் டொராண்டோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.
இதன் மூலம் அவர், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற அவா், அந்த சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற இளம் போட்டியாளா் (17 வயது) என்ற புதிய சாதனை படைத்தாா். இதற்கு முன்னா், ரஷிய நட்சத்திரமான கேரி கேஸ்பரோவ் 1984-இல் தனது 22-ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து குகேஷ் வாழ்த்து பெற்றார்.அப்போது, குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். முதல்வரைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.