#BREAKING: பீகாரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நேற்றிரவு சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
சரக்கு ரயில் என்பதால் இந்த விபத்தில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ரயில் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் காயமின்றி தப்பினர். இருப்பினும், தண்டவாளங்கள் மற்றும் மின்சார கம்பிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக ஹவுரா - பாட்னா - டெல்லி வழித்தடத்தில் செல்ல வேண்டிய பல விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அதிகாலை முதல் பயணிகள் ரயில் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆசன்சோல், மதுபூர் மற்றும் ஜாஜா ஆகிய நிலையங்களிலிருந்து ரயில் விபத்து நிவாரண ரயில்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியிலும், தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.