#BREAKING : தஞ்சை முன்னாள் எம்.பி காலமானார்..!
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் (2014-2019) உறுப்பினராக இருந்தவர் கு.பரசுராமன். இவர், அதிமுகவில் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ளார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார்.
2014-ம் ஆண்டு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வைத்திலிங்கம் சிபாரிசில் சீட் வாங்கி பரசுராமன் வெற்றி பெற்றார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, தஞ்சாவூர் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்ததில், வைத்திலிங்கத்தின் பங்கு அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட கு.பரசுராமன் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அறிவுடைநம்பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தேர்தல் நேரத்தில் களப் பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தார். இதனால் வைத்திலிங்கத்துக்கும் பரசுராமனுக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டது.
அதிமுக தலைமை மீது அதிருப்தியடைந்த அவர், சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.