#BREAKING : டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி மாரடைப்பால் மரணம்..!
ஒன்றிய பாஜக அரசு 2020ல் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக அச்சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றிய அரசு விவசாயிகளிடம் வழங்கியுள்ளது. அவை நிறைவேற்றப்படாததால், தற்போது மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் டெல்லியினுள் நுழைவதைத் தடுக்க காவல்துறை மற்றும் துணை இராணுவத்தினரைப் பயன்படுத்தி பாதையில் முள் வேலி அமைப்பது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவது எனப் பல நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. தடுப்புகளை மீற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் கடந்த 3 நாள்களாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை முதல் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.. காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது, வெளியான புகையை சுவாசித்ததால், அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக சுற்றியிருந்தவர்கள் கூறியுள்ளனர்.