#BREAKING : மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!
சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை அளிக்கும் நோக்கத்தில் 'பள்ளி மேலாண்மை குழு' சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் உரை நிகழ்த்தினார்.
முற்பிறவி, பாவ புண்ணியம் போன்ற விஷயங்கள் குறித்து அவர் பேசினார். சில பெண்கள் அழகில்லாமல் பிறக்க காரணம், முந்தைய பிறவியில் அவர்கள் செய்த பாவங்களே என்றார்.
மாணவிகள் அவரது பேச்சில் மூழ்கியிருந்த நிலையில், ஒரு ஆசிரியர் எழுந்து, தன்னம்பிக்கை உரையில் பாவ புண்ணியம் குறித்து பேச என்ன அவசியம் என்று கேட்டார்.
கேட்ட ஆசிரியர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. போன ஜென்மத்தில் இப்படியெல்லாம் குதர்க்கமாக பேசிய பாவம் தான், இந்த பிறவியில் உங்களுக்கு பார்வை இல்லாமல் போய்விட்டது என பேச்சாளர் தடாலடியாக பதிலளித்தார். அதை சில ஆசிரியர்கள் ஆட்சேபித்தனர். அவர்களுடன் கோபத்துடன் வாதிட்டார் பேச்சாளர்.
இந்த விவகாரம் வீடியோவில் பதிவாகி வேகமாக பரவியது. ஆசிரியர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் சூடாக கருத்து தெரிவித்தனர். பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் ஆவேசமாக கருத்து வெளியிட்டார். பள்ளியில் யார் பேச வேண்டும்; பேசக்கூடாது என்பதை, ஆசிரியர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டும்” என அதே பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 7-ந்தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமின் ,கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையடுத்து இன்று ஜாமின் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.