#BREAKING கோவைக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்..!
மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ஆய்வுப் பணியை கோவையில் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் திமுகவினர் ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு மின்சார மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து டைடல் பார்க் வளாகத்துக்குச் செல்லும் அவர், அங்கு 8 தளங்களுடன், 2 லட்சத்து 94,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திறந்து வைக்கிறார். பின்னர், ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் முதல்வர், அங்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துகிறார்.
மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர், போத்தனூர் பிவிஜி மண்டபத்தில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
பின்னர், 6-ம் தேதி காலை கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றுவரும், செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, திறந்தவெளி சிறைச்சாலையின் ஒரு பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் உருவாகும் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டிவைக்கிறார்.
பின்னர், அவர் பிற்பகலில் விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். இரண்டு நாட்களில் 6 நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.