#BREAKING : உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு - முதலமைச்சர் அறிவிப்பு..!
இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் இன்று இளம் வயதில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்ற சாதனையை அடைந்தார்.
செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டிங் லிரன்னை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். இதன் மூலம் இளம் வயதில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்தார் குகேஷ். சிங்கப்பூரில் நடந்த இந்த இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆட்டம் நீண்டது. கடைசி கட்டம் வரை யார் வெற்றிபெறுவார்கள் என தெரியாத ஒரு த்ரில்லிங் ஆட்டத்தை பார்க்கமுடிந்தது. இறுதியில் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து குகேஷ் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ரஷ்யாவின் புகழ்பெற்ற கேரி காஸ்பரோவ் என்பவரின் சாதனையை முறியடித்தார்.
1985 இல் அனடோலி கார்போவை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தினார் கேரி காஸ்பரோவ். அந்த சாதனையை குகேஷ் தற்போது முறியடித்துள்ளார். அதைத்தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், கடைசியாக 2013ல் மகுடம் வென்றார்.
இந்நிலையில், செஸ் வீரர் குகேஷ்க்கு பரிசுத்தொகை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழ்நாடு வீரர் குகேஷ்க்கு ₹5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.