#BREAKING : சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு - முதல்வர் அறிவிப்பு..!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு அங்கு இருக்கக்கூடிய கள நிலவரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்திருக்கிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பு கொண்டு அங்கு இருக்கக்கூடிய கள நிலவரங்களை குறித்து கேட்டு அறிந்தோம். நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் ஓரளவுக்கு அங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இன்று இரவு நிச்சயமாக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
சென்னையில் எங்கெங்கு தண்ணீர் தேங்குமோ, அங்கு முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது. அப்படியே பிரச்னைகள் இருந்தாலும், அதை சமாளித்துக் கொள்ளலாம்,” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் இன்று 3 வேலையும் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.பிறப்பித்துள்ளார்.