#BREAKING: நாளை முதல் திருப்பதியில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தடை..!

திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்று இருக்கலாம் என தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தேட தொடங்கினர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி உள்ள அரசு ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் இரவு நேரத்தில் பெற்றோருடன் நடந்து சென்ற மூன்று வயது சிறுவனை சிறுத்தை தாக்கி வனப்பகுதியில் இழுத்து சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் ராட்சத விளக்கை திடீரென்று ஒளிரவிட்டதால் சிறுத்தை அந்த சிறுவனை விட்டு சென்றது.
படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட போலீசார் சிறுவனை திருப்பதியில் உள்ள தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ஒன்றரை மாத காலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அந்த சிறுவன் பின்னர் உடல் நலம் பெற்று வீடு திரும்பினான். தற்போது அதே பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்தது மலேயேறும் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.நடைப்பாதையில் செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையாக செல்லும் படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்ல தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதோடு, காலை 6 - மாலை 6 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் வனவிலங்குகள் நடமாட்டம் குறையும் வரை இந்நடவடிக்கை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.