#BREAKING : நாமக்கல் MP வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. இதைக்கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் நாமக்கல்லில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், நாமக்கல் எம்.பி, வி.எஸ்.மாதேஸ்வரன், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யும்போது அதனை எதிர்த்து ஓட்டுப்போடவில்லை. மாறாக கூட்டத்தொடரில் பங்கேற்காமல், முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டார். எனவே அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்.பி மாதேஸ்வரன் கூறும்போது, “மக்களவையில் வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்த அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளமுடியவில்லை. அதற்கு இப்படி ஒரு விமர்சனம் வந்தால் நான் என்ன செய்வது?. எனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை டெல்லியில் இருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உண்மை தெரியும்
ஒரு சிலர் எனக்கு எதிராக பிரச்சினையை கிளப்புகின்றனர். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை. வரும் 13-ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என, அனைத்து முஸ்லிம் ஜாமத்துகளும் என்னை அழைத்துள்ளனர். நானும் கலந்துகொள்ள சம்மதித்துள்ளேன்” என்றார்.
இந்நிலையில் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் இன்று (ஏப்.10) பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில், படுக்கை அறையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் போது அந்த அறையில் இருந்த, மாதேஸ்வரனின் தாய் வரதம்மாள், நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.