#BREAKING : சாம்சங் ஆலை விவகாரத்தில் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டது..!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் சாம்சங் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 2,552 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
இவர்கள், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் முக்கிய கோரிக்கையான சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதை, ஆலை நிர்வாகம் ஏற்கவில்லை.
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தினர்; தீர்வு ஏற்படவில்லை. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை.
முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், பிரபலமான சாம்சங் தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடப்பது, முதலீட்டாளர்கள் தமிழகம் வருவதை பாதிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இதற்கிடையே தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், இல்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தலையிட்டு சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் விரைவில் தீர்வு காணுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25 நாட்களாக காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன பணியாளர்கள் போராடி வந்த நிலையில், அரசு தலையிட்டு, சுமூக முடிவை எட்ட வைத்துள்ளது.சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உடன்பாட்டால் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் 25 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது