#BREAKING : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம் : கைதானவர்கள் மீது குண்டாஸ்..!
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேரில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடத்தை புழல் சிறையில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் மாதவரத்தில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸார் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் துரத்திய போது அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை சுட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் இரு முறை சுட்டுள்ளனர். இதையடுத்து அவரது இடது பக்க நெஞ்சு பகுதியிலும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தற்போது 10 பேர் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று(ஜூலை 15) சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை முழுவதும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஜாமினில் இருக்கும் ரவுடிகள் நிபந்தனைகளை மீறினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.