#BREAKING : பிரபல பாலிவுட் நடிகையின் தந்தை மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் `சைய... சைய' பாடலுக்கு நடனமாடி மிகவும் புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகை மலைகா அரோரா.அவர் ஏராளமான இந்தி படங்களில் குத்துப்பாட்டிற்கு நடனமாடி இருக்கிறார். இது தவிர டி.வி ஷோ நடத்தி வருகிறார். மலைகா அரோரா மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். அவர் தந்தை அனில் அரோராவும், அவரது வீட்டில் வசித்து வந்தார்.
மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று புதன்கிழமை (செப்.11) காலை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை, பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அனில் அரோரா இன்று காலை 9 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இன்று காலையில் நடிகை மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரத்தில், அனில் அரோரா வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.என்ன காரணத்திற்காக அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவராத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் அனில் அரோராவின் மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனில் அரோரா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கேள்விப்பட்டதும், மலைகாவின் உறவினர்கள் மற்றும் மலைகா அரோராவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான் ஆகியோர் மலைகாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். மலைகா அரோராவிற்கு 11 வயது இருக்கும்போதே பெற்றோர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
மலைகாவையும் அவரின் சகோதரியையும் அவர் தாயார்தான் கஷ்டப்பட்டு வளர்த்தார். மலைகா அரோரா, பாலிவுட் நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான அர்பஸ் கானை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இருப்பினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக இருவரும் விவாகாரத்து செய்து கொண்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டு தனித் தனியே வாழத் தொடங்கினர்.அதன் பிறகு தன்னை விட வயது குறைவான நடிகர் அர்ஜூன் கபூரை மலைகா தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக மீடியா செய்திகள் கூறுகின்றன. அனில் அரோராவின் சடலம் மும்பை பாபா மருத்துவமனையில் உள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.