#BREAKING : திமுகவில் இணைந்த பிரபல நடிகரின் மகள்..!

நடிகர் சத்யராஜின் இரு வாரிசுகளில், மகன் சிபி சத்யராஜ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறார். மற்றொரு வாரிசான திவ்யா சத்யராஜ், தந்தையின் கொள்கைகள் மற்றும் அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்டதில், அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
திவ்யா , ஊட்டச்சத்து நிபுணராவார். இவர் மகிழ்மதி என்ற ஒரு இயக்கத்தை நடத்தி அதன் மூலம் வுறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கி வருகிறார். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டங்களில் ஒன்றான அட்சய பாத்திரத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நெடுந்தீவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த செரண்டிப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.இவர் அரசியல் கட்சியிலும் இணைய போகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவில் இணைந்து போட்டியிடுமாறு வந்த அழைப்பை தான் ஏற்கவில்லை என தெரிவித்திருந்தார். அதாவது ஒரு மதத்தை போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் தான் தனிக்கட்சி தொடங்க போவதில்லை என்றும் ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே தற்போது திமுகவுக்கு ஆதரவாக சத்யராஜ் இருந்த வரும் நிலையில், ஒரு வேளை திவ்யா திமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் திவ்யா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பாஜகவுக்கு எதிரான அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தவண்ணம் இருந்தார். இதனையடுத்து, திமுகவில் இணைந்து அவர் தீவிர அரசியலில் செயல்படவுள்ளார்.
மேலும் அவர், "நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவில் இணைந்துள்ளேன். மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு" என்றார். மேலும், " என்னுடைய அப்பா எனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்" என்றார்.