#BREAKING : ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு..!

சென்னையில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவிலும் தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை. 2026 தேர்தலில் தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஆதவ் அர்ஜுனா கடந்த டிசம்பர் 15ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால், ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைவாரா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? என எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் அடுக்குமாடி குடியிருப்பில் அவரையும், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தையும் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை சந்தித்து பேசினார். இதனால் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணையவது உறுதியானது.
தவெக கட்சியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் சிறப்புப் பிரிவு பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பும், பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.