1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்..!

1

மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. மகளிர் உரிமை திட்டத்திற்காக இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆற்றிய உரையில் தெரிவித்தாவது:-

”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது.தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் - ஆயிரம் ரூபாயை மாதாமாதம் - ஆண்டு தோறும் பெறப் போகிறார்கள்.

அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும்  அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளாகிய உங்களுக்கு இருக்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம்.

அதேபோல்தான் சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கிடைக்கும் கெட்டபெயரும், என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனவே எந்த இடத்திலும் - எந்தச் சூழலிலும் - எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறு கூட நடந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருவதை, தற்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல், வரும் 15-ஆம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆகும். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.

 

Trending News

Latest News

You May Like