1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING ; சீமானின் வலதுகரம் மதுரை வெற்றிக்குமரன் தவாகவில் இணைந்தார்..!

Q

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பல்வேறு கட்டங்களில் ஆதரவாக இருந்தவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.

 

பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கி நடத்தி வரும் வேல்முருகன், பொதுவாக சீமானை விமர்சிப்பது இல்லை; சீமானும் வேல்முருகனை 'ரத்தம்' என்று உறவாக அழைப்பது வழக்கம். தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே சில மோதல்கள் எழுந்தபோது கூட, யாரையும் விமர்சிக்கக் கூடாது என இருதரப்பும் கட்சியினரை அமைதிப்படுத்தியது.

 

இந்த நிலையில் அண்மையில் சீமானின் வலதுகரமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்குமரன், அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு முன்னாள் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை உருவாக்கியதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு இயக்கத்தின் சார்பாக, திருச்சியில் நவம்பர் 27-ந் தேதி மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றிருந்தார்.

இதனையடுத்து பச்சை தமிழகம் கட்சியை நடத்தி வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தமது கட்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார். தற்போது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் உருவாக்கிய தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை வெற்றிக்குமரன் கூறுகையில், நாங்கள் இதுவரை பின்பற்றி வந்த கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே கொள்கையுடன் அதே இலக்குடனான கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என முடிவு எடுத்தோம். இதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

பிரபாகரனை எங்களைப் போல தமது தலைவராக ஏற்றுக் கொண்டவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. அவரது கரத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இன்று முதல் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் எங்கள் அமைப்பை முழுமையாக இணைக்கிறோம். இது அதிகாரத்தை நோக்கிய பயணம்தான். தனி ஒரு கட்சியாக அதிகாரத்தை நோக்கி பயணிக்க முடியாது என்பதாலேயே தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைகிறோம். இவ்வாறு வெற்றிக் குமரன் தெரிவித்தார்.


 

Trending News

Latest News

You May Like